Tuesday, March 8, 2016

Hotel Usharani - Salem (Vembadithalam)

Courtesy :Mr. Raj Kumar (FB share)

சேலம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில், கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் காக்காபாளையம் முன்னர் ஒரு U டர்ன் செய்தால் இளம்பிள்ளை ஊருக்கு செல்லும் ரோட்டில் சென்றால் வரும் ஒரு ஊர் என்பது இந்த வேம்படிதாளம். சேலத்தில் கிடைக்காத நல்ல உணவகமா, இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று நீங்கள் கேட்க முடியாத அளவுக்கு இங்கு உணவின் சுவை இருக்கிறது. ஊருக்குள், மெயின் ரோட்டிலேயே கடை இருப்பதால் இரண்டு பக்கமும் மதிய நேரத்தில் கார் பார்க் செய்யப்பட்டு இருக்கும், அப்போதே தெரிந்துவிடும் இந்த ஹோட்டல் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை !
உள்ளே உட்கார்ந்து சாப்பிட இடம் கிடைப்பது குதிரை கொம்பு என்பதால், நிறைய பேர் பார்சல் செய்துக்கொண்டு சென்று காரிலோ அல்லது பக்கத்தில் இருக்கும் தோப்பிலோ உட்கார்ந்து சாப்பிடுவதை பார்க்கலாம். உள்ளே இடம் கிடைத்து உட்கார்ந்தவுடன் ஒரு பெரிய வாழை இலையை உங்களது முன் போடும்போது, ஒரு 10% பசி பறந்துவிடும். வெளியே இருக்கும்போதே பலரும் பிரியாணியை பார்சல் செய்து வாங்கி போவதும், பலர் போன் செய்து எனக்கு பிரியாணி எடுத்து வைத்துவிடுங்கள் என்று சொல்வதும், வெளியே பலரும் அட்வான்ஸ் புக்கிங் செய்வதும் என்று இருப்பதை பார்க்கும்போதே இன்று பிரியாணிதான் என்று மனதில் முடிவாவதை தடுக்க முடியாது. சிக்கன் பிரியாணி என்று சொன்னவுடன் சூடாக எண்ணை பளபளப்புடன் வைக்கவும், கொஞ்சம் ரைத்தா வையுங்கள் என்று கேட்கும்போதே மூளை வறுவல், நாட்டு கோழி பெப்பர் வறுவல், மட்டன் சுக்கா என்று வைத்துவிட்டு காடை, புறா வேண்டுமா என்று கேட்க.... நாங்கள் இதையே எப்படி சாபிடுவது என்று யோசித்து கொண்டு இருந்தோம் !
பொதுவாக நமது வீட்டிற்க்கு உறவினர்கள் வந்தால் சாப்பாட்டை போதும் போதும் என்று சொன்ன பின்னரும், மெலிஞ்சிடீங்க நீங்க நல்லா சாப்பிடுங்க என்று அடுத்த முறை அவர் வருவதற்கு யோசிக்கும் அளவுக்கு கவனிப்போமே... இங்கும் இவர் அப்படிதான் கவனித்தார், கொஞ்சம் அசந்தால் நெப்போலியன் அவரது தம்பிக்கு ஊட்டுவார் இல்லையா, அது போல ஊட்டி விடுவாரோ என்று யோசிக்கும் அளவுக்கு ரொம்பவே பாசமாக கவனித்தார். பிரியாணியில் பெப்பர் கொஞ்சம் கூடவே இருக்க, அதனோடு நாட்டு கோழியும், மூளையும் என்று அருமையான காம்பினேசன். பசியோடு சென்றால் திருப்தியோடு வரலாம்.
பஞ்ச் லைன் : சுவை - அருமையான, சுவையான பிரியாணியும், மட்டன், சிக்கன் அயிட்டங்களும் என்று ஒரு ஹோமிலி சுவை. அமைப்பு - ஒரு சிறிய உணவகம்தான், பொதுவாக உள்ளே உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றால் கொஞ்சம் நேரம் ஆகும். பணம் - விலை ஒருவருக்கு சுமார் 250 ரூபாய் ஆனது !! சர்வீஸ் - அருமையான, வீட்டில் விருந்தினர்களுக்கு கிடைக்கும் வரவேற்ப்பு.





Courtesy :Mr. Raj Kumar (FB share)

No comments:

Post a Comment